ஓரே இருள், எங்கே இருக்கிறேன்? ஒன்றுமே புரியவில்லை. எழலாம் என்று எத்தனிக்கிறேன் முடியவில்லை. ஏதோ ஒரு பாரம், முதுகுப்பக்கத்தில் நரம்புகளுக்கு கைவிலங்கிட்டது போல இருக்கிறது. ஆ.... முடியவில்லை வலிக்கிறது எழும்ப முடியவில்லை.
ம்... கட்டாயம் எழுந்தே ஆக வேண்டும், ஆம் இதோ இப்போது எழும்பிவிடுவேன், ம்ம்... ஆஹ்.... ஆ.... ஐயோ என்ன வலி முதுகு உடைந்து விட்டதா... வலியை பொறுத்துக்கொண்டு கற்குவியலுக்குள்ளிருந்து எழுந்து விட்டேன், அப்பாடா.
கண்கள் கூசுகிறது, சற்று குளிர்வது போல உணர்கிறேன்.கண்களைத்திறந்து பார்க்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. கட்டடங்கள் கூட இல்லை. என்ன நடந்தது கொஞ்ச நேரத்துக்கு முதல் ஆம் ஹாஹாஹா.... நான் பிழைத்துவிட்டேனா? பூமியைத்தாக்கிய விண்கல் என்னைத்தாக்கவில்லை, எல்லோரும் இறந்து விட்டனரா, நான் மட்டும் பிழைத்துவிட்டேனா? இனம்புரியாத மகிழ்ச்சி. 2012ஆம் ஆண்டு உலக அழிவிலிருந்து தப்பிவிட்டேன், நான் மட்டும்தான் தப்பியவனா? இந்த உலகிற்கே நான்தான் இப்போது சொந்தக்காரனா?
"அடச்சீ என்ன மனிதனடா நீ உலகத்தில் உள்ள அனைவருமே அழிந்து விட்டனர், நீ பிழைத்தது உனக்கு மகிழ்ச்சியா?" மனச்சாட்சி எனக்குள் குமுறுகிறது. சரி முடிந்தது முடிந்து விட்டது. கணினிக்கு முன் உட்கார்ந்து கார்பிளாக்ஸ் சாப்பிட்ட எனக்கு இன்று பழங்குடியினர் போல மரங்களில் உள்ள பழங்கள், இலைகளைச் சாப்பிட்டு பசியாற்ற வேண்டிய நிலை. சிலநாட்கள் இப்படியே கடந்தது. முதுகு வலியும் சற்றுக்குறைய எழுந்து நடக்கத்தொடங்கினேன். கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் வழியெங்கும் பிணங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் வாகனங்கள் செத்துப்போன கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்து கிடக்கிறது.
யாரது? அவரா அது? அவனுக்கென்ன மரியாதை அது அவனா? அங்கே கொட்டில் அமைத்து என்னசெய்கிறான்? அட இங்கு குட்டிக் குட்டி உருவங்கள் வேறு இருக்கின்றனவே? ஆம் அந்தக் குட்டி உருவங்கள் இதுவரை செய்திகளிலும் படங்களிலும் பார்த்த ஏலியன்கள்தான், அவை எப்படி இவனுடன், அட யாரிந்த இவன் என்கிறீர்களா? காவி உடை, கையில் கமண்டலம் ஆம் இவன் அந்தப்போலிச்சாமியே தான். ஏலியன்களுடன் என்ன செய்கிறான், சற்றுகிட்டப்போய்ப்பார்க்கலாம் என்று போகிறேன், மனம் படபடக்கிறது.ஏதோ மந்திரம் சொல்கிறான், அவையும் (ஏலியன்களும்) சொல்கின்றன, அவனின் காலில் விழுந்து வணங்குகின்றன.
திடீரென டிஜிட்டல் பதாகைகளுடன் மைக் போட்டுக் கத்தியபடி ஒரு ஏலியன்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. நடுவில் ஒருத்தர் மட்டும் வித்தியாசமாகக் காணப்படுகிறார், ஆம் அந்த அரசியல்வாதிதான், இவனும் பிழைத்துக் கொண்டானா? என்ன கொடுமை இது, நல்லவர்கள் யாருமே பிழைக்கவில்லையா? மீண்டும் மனச்சாட்சி குமுறுகிறது, கவலை தொற்றிக்கொள்கிறது. மீண்டும் இப்படியொரு சமூகத்தில் வாழவேண்டுமா?
நீண்ட நேர நடைப்பயணம், கால்கள் கடுக்கிறது நிலத்தில் அமர்ந்து விட்டேன், களைப்பு மிகுதியால் கையை நிலத்தில் ஊன்றுகிறேன், அங்கே கையில் தட்டுப்பட்டது ஒரு மடிக்கணனி எடுத்துப்பார்க்கிறேன் வேலை செய்கிறது, அட வயர்லஸ் இன்டர் நெட் கூட வேலை செய்கிறது. அட உடனடியாக மடிக்கணனியில் அந்தப்போலிச்சாமி, அரசியல் போன்ற விடயங்களைப்பதிவிடவேண்டும் ஆனால் அந்த ஏலியன்களுக்கு எந்தமொழி தெரியுமோ? உடனடியாக யோசனை தோன்றுகிறது அவர்கள் பற்றிய வீடியோககளை பதிவிடுகிறேன், ஆம் என்னதான் உலகம் அழிவு ஏற்பட்டாலும் இப்படி ஒருசிலர் தப்பித்துக்கொண்டால் மனிதனென்ன எந்த உயிரினமும்,ஏலியன்களும் கூட அடிமையாகும் அவர்களுக்கு.
பி.கு - உலகம் அழியுதோ இல்லையோ அழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கையை அழிப்போம்.
நன்றி : nbavan
Comments
Post a Comment